
மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுள்ளார் என்பதற்கான பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் டுபாய் சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்றுடன் விருந்துபசாரத்தில் ஈடுபடும் காணொளிகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.
இந்தக் காணொளிகளில் 'மோதர நிபுன' எனப்படும் குற்றவாளியின் சகோதரனான சதுர தில்ருக்ஷான் மற்றும் கெசல்வத்தை தினுஷ ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காணப்படுவதுடன், அவர்களுடன் கஹந்தகம மிக நெருக்கமாகச் செயற்படுவதும் பதிவாகியுள்ளது.
இதன்போது அவர்கள் கஹந்தகமவை 'டடா' என்று அழைக்கும் காணொளிகளும் காணப்படுவதோடு இப்பாகேவத்தை 'சுஜீ' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருடனும் அவர் நெருக்கமான தொடர்புகளைப் பேணியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கஹந்தகம, இப்பாகேவத்தை சுஜீவிடம் பெற்றுக்கொண்ட ஐஸ் போதைப்பொருளுக்கான பணத்தைச் செலுத்தத் தவறியமையால், அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கஹந்தகம வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், இந்தப் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் 1100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நுகேகொடைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












