நெடுந்தீவு – யாழ்ப்பாணம் இடையே 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் புதிய படகு சேவை – அமைச்சரவை அங்கீகாரம்



'பிரஜாசக்தி' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான கடல்வழிப் போக்குவரத்துக்காக ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய பயணிகள் போக்குவரத்து படகு ஒன்றை சேவையில் அமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கு இடையே பாதுகாப்பான மற்றும் அதிக பயணிகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்வதற்கான வசதிகள் போதுமானதாக இல்லாததால், பயணிகள் போக்குவரத்து பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்குத் தீர்வாகவே இப்புதிய படகு சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இப்பயணிகள் படகானது வரையறுக்கப்பட்ட சீனோர் கம்பனி மூலம் தயாரிக்கப்படவுள்ளது. தயாரிப்புப் பணிகள் நிறைவுற்றதும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நெடுந்தீவு அபிவிருத்திக் குழுவிடம் இதன் இயக்கப் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

இச்சேவையின் மூலம் ஈட்டப்படும் இலாபம் முழுவதும், குறித்த அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட நெடுந்தீவில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான யோசனையைக் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.