
குவைத்தின் ஒட்டுமொத்த வீட்டுப்பணியாளர்களில் 86.1 சதவீதமானோர் நான்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும்; இந்திய, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக உள்ள 883,308 பேரில் 760,744 பேரைக் கொண்டுள்ளனர் என சிவில் தகவல்களுக்கான பொது அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதில் 344,532 வீட்டுப்பணியாளர்களுடன் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இது மொத்தப் பணியாளர்களில் சுமார் 39 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இத்துறையில் உள்ள ஏனைய நாடுகளின் பணியாளர்களை விட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகளவில் காணப்படுகிறது.
இலங்கைப் பணியாளர்கள் 157,901 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், குவைத்தின் வீட்டுப்பணியாளர்களில் 17.9 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 151,369 பணியாளர்களுடன் (17.1சதவீதம்) பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மூன்றாவது இடத்திலும், 106,942 பணியாளர்களுடன் (12.1சதவீதம்) பங்களாதேஷ் நாட்டவர்கள் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும் குவைத்தில் உள்ள ஒவ்வொரு 10 வீட்டுப்பணியாளர்களில் 8 பேருக்கும் அதிகமானோரைக் கொண்டுள்ளனர்.
எஞ்சிய 13.9 சதவீதம் அல்லது தோராயமாக 122,564 பணியாளர்கள் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இத்துறையில் உள்ள ஒவ்வொரு 10 பணியாளர்களில் சுமார் 4 பேர் இந்திய நாட்டவர்கள் மட்டுமே என்பதுடன், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் சமூகத்தினர் மிகக் குறைந்த இடைவெளியில் ஒரே மாதிரியான பங்களிப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








.jpg)



