
இலங்கையை 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி வழிநடத்தும் தேசிய இலட்சியத்தை அடைவதற்கு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மனிதனை மையமாகக் கொண்ட திறன் விருத்தியும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) பொன்விழாவுடன் இணைந்ததாக, ஒக்டோபர் 14ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 44ஆவது தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் (NITC 2026) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
அரசாங்கத்தின் பிரதான டிஜிட்டல்மயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால இலக்குகளின் கீழ், அரச கொடுப்பனவுகளை டிஜிட்டல்மயமாக்கும் GovPay தளத்தின் ஊடாக, 2025 டிசம்பர் மாதமளவில் 215க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கொடுக்கல் வாங்கல்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்வித் துறையில் காணப்படும் டிஜிட்டல் இடைவெளியை நீக்குவதற்காக, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான அடித்தளம் பாடசாலை வகுப்பறையிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இதன்போது, தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதற்கு மேலதிகமாக, ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை வளர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அவசர அனர்த்தச் சூழ்நிலைகளின்போது தொடர்பாடல் நடவடிக்கைகளைத் தடையின்றிப் பேணுவதற்காக, அமெரிக்க அரசாங்கத்தின் 181,837 அமெரிக்க டொலர் நிதி மானியத்தின் கீழ், பயிலுனர் வானொலி வலையமைப்பொன்றை நிறுவுவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. செயற்கை நுண்ணறிவை அரச மற்றும் தனியார் துறைகளுடன் ஒருங்கிணைக்கும்போது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மனித நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஜப்பானின் Society 5.0 தொலைநோக்கு மற்றும் சிங்கப்பூரின் SkillsFuture வேலைத்திட்டம் போன்ற அணுகுமுறைகளுக்கு அமைவாக, தொழில்நுட்பம் என்பது வெறுமனே மற்றுமொரு கருவி மட்டுமல்ல என்றும், நாட்டின் அனைத்து குடிமக்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே இறுதி இலக்கு என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட இலங்கை கணினிச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.







.jpg)




