போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் வடக்கு, கிழக்கு மக்கள் பாதிப்பில் – மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை !



மூன்று தசாப்தகாலப் போரினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், இன்னமும் அதன் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல், வடக்கு முஸ்லிம் வெளியேற்றம், மனிதப்புதைகுழிகள் என்பன உள்ளடங்கலாக மக்களின் மனித உரிமைகளைப் பாதிக்கும் பல்வேறு விவகாரங்களில் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்குத் தடையாக இருக்கும் நீண்டகால அடிப்படையிலான கட்டமைப்புசார் பிரச்சினைகளைக் கண்டறிவதுடன், அவற்றுக்குத் தீர்வுகண்டு, அம்மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

அதற்கமைய 1983 - 2009 ஆம் ஆண்டு வரையிலான ஆயுதமோதல், 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் அதன் பின்னரான சமூக, பொருளாதாரச் சூழல் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு 2024 ஒக்டோபர - 2025 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட தரவுகள், களவிஜயங்கள் மற்றும் பல்தரப்பு சந்திப்புக்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் இவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் 1983 - 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்த ஆயுதமோதலினாலும், அதற்குக் காரணமான வரலாற்று ரீதியான பாகுபாட்டுக் கொள்கைகளினாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மிகமோசமான மனித உரிமை மீறல்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள், பல்வேறுபட்ட கட்டமைப்பு ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்ததுடன், இப்போதும் அவற்றின் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்ற கட்டமைப்பு நிறுவப்பட்ட போதிலும், நிதிப்பற்றாக்குறை, நிர்வாக ரீதியான சிக்கல்கள், அரசியல் தன்முனைப்பின்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பான கோப்புகள் முறையாகப் பேணப்படாமை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இக்கட்டமைப்பின்மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

இழப்பீடுகளோ அல்லது மரணச்சான்றிதழ்களோ தமக்குத் தீரவாகாது என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் கோரி பெரும்பாலும் பெண்களைத் தலைமை தாங்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதுடன் கண்காணிப்புகளும் தொடர்கின்றன.

மனிதப்புதைகுழி அகழ்வு

சர்வதேச நியமங்களின் பிரகாரம் மனிதப்புதைகுழிகளைக் கண்டறிவது முதல் நீதியை நிலைநாட்டுவது வரை 7 கட்டக் கடப்பாடுகள் அரசுக்கு இருக்கிறது. அதேவேளை இலங்கையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கும், மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் கண்டறிவதற்குமான அதிகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு உண்டு. 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி இலங்கையில் 32 மனிதப்புதைகுழிகள் அடையாளங்காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 13 மனிதப்புதைகுழிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளன. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தற்செயலாகக் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரையில் 580 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனிதப்புதைகுழி வழக்கில் 7 நீதிவான்கள் மற்றும் அவ்வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய அரச மருத்துவ அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டமையினால் விசாரணைகள் தாமதமடைந்தன. அதேபோன்று இவ்விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற தடயவியல் மற்றும் தொல்லியல் நிபுணர்களின் பற்றாக்குறை, மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான போதிய தொழில்நுட்ப வசதியின்மை என்பன முக்கிய குறைபாடுகளாகக் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் நிலையான வழிகாட்டல்கள் பின்பற்றப்படாமை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரல் என்பன அவதானிக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரிகளைச் சேகரித்து மரபணு வங்கியொன்றை நிறுவுவது அவசியமாகும்.

வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தைச் சேர்ந்த சுமார் 75,000 முஸ்லிம்கள் அவர்களது சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச்செல்வதற்குக்கூட அவகாசம் அளிக்கப்படாமல் மிகக்குறுகிய காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் உறவுகளை இழந்து புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், 2008 க்குப் பிந்தைய அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கே அரசு அதிக முன்னுரிமை அளித்தது. போரினால் முஸ்லிம்கள் குறைந்தளவிலேயே பாதிக்கப்பட்டனர் என்ற தவறான எண்ணத்தினால், அவர்களது பிரச்சினைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து முறையான அரச விசாரணைகளோ அல்லது வரலாற்று ரீதியான ஆவணப்படுத்தல்களோ மேற்கொள்ளப்படவில்லை.

குறுகிய காலப்பகுதிக்குள் அவசரமாக வெளியேறியமையினால் காணி உறுதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத முஸ்லிம் மக்களுக்கு வடக்கில் மீண்டும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதில் பல்வேறு தடைகள் நிலவுகின்றன. அத்தோடு நீண்டகாலப்போரினால் நிலம் மற்றும் ஏனைய வளப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் வடக்கில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கும் இடையே வளங்களைப் பகிர்வதில் இணக்கமற்ற சூழல் நிலவுகின்றது.

இவ்விவகாரத்தில் எமது ஆணைக்குழு பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து நில உரிமையை 3 மாதங்களுக்குள் சீர்செய்வதாக உரிய அதிகாரிகளிடம் வாக்குறுதி பெறப்பட்டதுடன், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், போலி காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறும் அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இராணுவமயமாக்கம்

1990 ஆம் ஆண்டு முதல் வடக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை. அதேபோன்று கிழக்கில் தற்காலிகப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக்கூறி 2010 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள், பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னமும் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்படவில்லை.

அதேவேளை படை முகாம்களுக்குள் தனியார் நிலங்களில் இராணுவத்தினரால் பாரியளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் சந்தை விலையை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதனால், உள்ளுர் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணஙிகள்ல இராணுவமயமாக்கலைக் குறைத்து, சிவில் நிர்வாகத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு ஏதுவான தேசிய பாதுகாப்பு மறுசீரமைப்புச் செயன்முறை இல்லாமை போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மாகாணங்களில் பொருளாதார ரீதியில் இராணுவத்தினர்மீது தங்கிவாழும் நிலையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு, படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்படவேண்டும். அத்தோடு வருடாந்த வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சை விட ஏனைய அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும்.