முல்லைத்தீவில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 20 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!



முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (17) உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.