
ஐந்து வருடங்களுக்கு ஆட்சிக்கு வந்த கள்ளத்தோணிக் கூட்டத்துக்கு 2500 ஆண்டுகால பாரம்பரியத்தின் மீது கை வைக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலையில், அவரது காவி உடையை அகற்றி சிறைச்சாலை சீருடையை அணிவித்துள்ளமை தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது ஞானசார தேரர் தொடர்பான தனிப்பட்ட பிரச்சினையல்ல. பௌத்த பிக்குவொருவரின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் தொடர்பிலும் கேள்வி எழுந்துள்ளது.
சிறைச்சாலை நிர்வாக விதிமுறைகளின் 216ஆவது பிரிவில், எளிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பௌத்த பிக்குகளுக்கு தங்களது ஆடைகளை அணிந்திருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பிக்கு ஒருவர் சிறைச்சாலை சீருடையை அணிய வேண்டுமா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால், சிறைச்சாலை அதிகாரி தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது. அந்த விடயத்தை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக அரசாங்கத்திடம் முன்வைத்து ஆலோசனை பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி சிறைச்சாலை சீருடையை அணிவிப்பதற்கு முன்னர் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேதென்ன, மூன்று வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் சிறைச்சாலை சீருடையை அணிய வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், 216ஆவது பிரிவில் மூன்று வருடங்கள் என்ற வரையறை குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறான விடயத்தில் விதிமுறைகளை முழுமையாக அறிந்து கொண்டு பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டும்.
ஞானசார தேரர் முன்னர் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தபோதும் காவி உடையுடனேயே இருந்தார். அப்போது அவருக்கு காவி உடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது வேறுபட்ட தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட அடிப்படை என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.
இது ஞானசார தேரரின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது நாட்டின் பௌத்த பிக்குகள், பௌத்த சாசனம் மற்றும் 2500 ஆண்டுகால பாரம்பரியத்துடன் தொடர்புடைய விடயம். ஐந்து வருடங்களுக்கு ஆட்சிக்கு வந்த கள்ளத்தோணிக் கூட்டத்துக்கு இந்த 2500 ஆண்டுகால பாரம்பரியத்தின் மீது கை வைக்க முடியாது என்றார்.












.jpg)