நாடு தழுவிய பொலிஸ் சுற்றிவளைப்பு – 26,523 பேர் சோதனை; சந்தேகத்தின் பேரில் 434 பேர் கைது !



இலங்கை பொலிஸாரால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (9) மாபெரும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையின்போது 26,523 நபர்கள் பொலிஸாரால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 434 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 13 பேர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட 348 நீதிமன்ற பிடியாணைகளில், நிலுவையில் இருந்த 253 பிடியாணை உத்தரவுகளின் கீழ் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் மீதான நடவடிக்கையில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் ஏராளமான போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதிகளில் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் செலுத்திய 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 4,443 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கவும், வீதிப் பாதுகாப்பை பலப்படுத்தவும் நாடு தழுவிய ரீதியில் இத்தகைய விசேட சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.