ஒக்டோபர் 31இல் வங்காள விரிகுடாவில் மீண்டும் வளிமண்டலத் தளம்பல் உருவாக வாய்ப்பு!



வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு வளிமண்டல தளம்பல் நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், இந்தச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது குறித்த மேலதிக முன்னறிவிப்புகள் எதிர்காலத்தில் வெளியிடப்படலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி சஜித் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

வளிமண்டல திணைக்களத்தின் முன்னறிவிப்புக்களை வெளியிட்டபேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நிலவும் எல்நினோ காலநிலை நிலைமை காரணமாக இவ்வாறான வளிமண்டல தளம்பல் சூழல்கள் அடிக்கடி தோன்றக்கூடும். எனினும், ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் உருவான தாழமுக்கம் 'அர்னாப்' போன்ற புயலாக வலுவடைந்துள்ளதால் வங்காள விரிகுடா கடல் பகுதி ஓரளவு குளிர்ச்சியடைந்துள்ளதால், மீண்டும் ஒரு கட்டமைப்பு உருவாவதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளது என்றார்.

வங்காள விரிகுடாவில் சூறாவளி அல்லது தளம்பல் நிலைகள் உருவானால் அது எப்போதும் இலங்கையில் பலத்த மழை அல்லது காற்றை உருவாக்கும் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே காணப்படுகிறது. ஆனால் இலங்கையைச் சுற்றி காற்று உருவாகும் திசைக்கு ஏற்பவே மழை வீழ்ச்சியின் அளவு மாறுபடும். உதாரணமாக, இந்தியாவினூடாக இலங்கைக்குக் காற்று வீசுவதால் மழைவீழ்ச்சி குறைந்து காணப்படுவதுடன், காலை வேளையில் பனிமூட்டம் போன்ற நிலைமைகள் அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, மத்திய-மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த 'அர்னாப்' சூறாவளியானது நேற்றுமுன்தினம் (27) முற்பகல் 11.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்கே சுமார் 820 கிலோமீற்றர் தொலைவில் மையம்கொண்டிருந்தது. இப்புயல் இன்று (28) முற்பகல் 11.30 மணியளவில் தீவிர சூறாவளியாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதி ஊடாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை வானிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்றுடன் (28) படிப்படியாகக் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றார்.

மண்சரிவு எச்சரிக்கை

களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலிய ஆகிய 3 மாவட்டங்களில் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கிறது. இதனால் மழை தீவிரமடையும் பட்சத்தில், மலைச்சரிவுகள் மற்றும் பாறைச் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கடந்த காலங்களில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேங்கியுள்ள பாறைகளும் மண்ணும் நீருடன் அடித்து வரப்படக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.