
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்கள் ஏற்பட்ட மோதலில் போது சிறைச்சாலை காவலர்கள் 10 பேர் மற்றும் கைதிகள் 22 பேர் உள்ளடங்களாக 32 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சான்றுப் பொருட்கள் அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஐந்தாவது முறையாக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய குறித்த அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நீர்கொழும்பு நீதிவான், அதனை ஞாபகப்படுத்தும் கடிதத்தை சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று கையளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கு வியாழக்கிழமை (29) நீர்கொழும்பு நீதிவான் ஷீலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் கான்ஸ்டபிள் துலங்க விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர்களின் பட்டியலில் 38 முதல் 52 வரையிலான பெயரிடப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு அடையாள அணிவகுப்புக்காக புதிய சாட்சிகள் 15 பேர் வரவழைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அடையாள அணிவகுப்புக்காக பிரதான நீதவான், பிரீமல் அமரசிங்கவை பதில் நீதவானாக நியமித்தார். தொடர்ந்து விடயங்களை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதியன்று 15 சந்தேகநபர்களை உள்ளடக்கிய அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு அனுமதி கோரியதுடன், அதற்காக 15 சாட்சிகளையும் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கான உத்தரவையும் நீதிவான் பிறப்பித்தார்.
பிணையில் சென்றுள்ள சில சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்கு ஆஜராகவில்லை என அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். குறித்த சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், வெவ்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளும் அணிவகுப்புக்கு ஆஜர்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக அவர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 2480 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள சந்தேகநபர்களிடமிருந்தும் சாட்சிகளைப் பதிவு செய்து மிக விரைவில் வழக்கை நிறைவுக்கு கொண்டுவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் சமர்ப்பித்த விசாரணை முன்னேற்ற அறிக்கையை பரிசீலித்த நீதிவான், இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 106 சந்தேகநபர்களையும் நவம்பர் 5 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேற்படி வழக்கு எதிர்வரும் நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இந்த மோதலின் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் 10 பேரும், கைதிகள் 22 பேரும் உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த வழக்குத் தவனையின் போது, உயிரிழந்தவர்களின் மரண சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவி்ட்டிருந்தார். அதற்கமைய நேற்றைய தினம் மரண சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் நீதிமன்றத்திற்குச் சமூகமளித்திருந்தனர்.






.jpg)





