மெட்ரோ பேருந்துடன் திட்டமிட்டு மோதியதாகக் குற்றச்சாட்டு – 3.42 இலட்சம் ரூபாய் சேதம்; சொகுசு பேருந்து சாரதி கைது!



கெஸ்பேவ - கொழும்பு வீதியின் மிரிஸ்வத்த பகுதியில், மெட்ரோ பேருந்து ஒன்றுடன் திட்டமிட்டு மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பேருந்து சாரதி ஒருவர் பிலியந்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை - கொழும்பு வீதியில் பயணித்த சொகுசு பேருந்தின் ஓட்டுநரான சந்தேக நபர், கஹதுடுவாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்தின் முன்பக்க வலது மூலையில் மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் மெட்ரோ பேருந்தின் வலது பக்கக் கண்ணாடி மற்றும் அதற்குக் கீழே உள்ள ஜன்னல் கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளதுடன், இதனால் சுமார் 3,42,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹொரணை, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இன்று சனிக்கிழமை (10) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.