
தேசிய மனநல நிறுவனத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சிகிச்சைகள் நிறைவு பெற்றுள்ள சுமார் 400 பேர் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என தேசிய மனநல நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக அலகப்பெரும தெரிவித்தார்.
ஒக்டோபர் 10 சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் வியாக்கிழமை (08) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,
"வாழ்வின் அனுபவங்களை செவிமடுப்போம், உண்மையான குரல், உண்மையான மாற்றம்" என்ற கருபொருளுக்கமைய இவ்வாண்டு சர்வதேச மனநல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எமது நிறுவனம் மனநலப் பாதிப்புக்குள்ளானோரை மாத்திரம் உள்வாங்கும் இடமன்றி, நாட்டில் மனநலத் துறையுடன் தொடர்புடைய அனைத்துப் பணியாளர்களையும் பயிற்றுவிக்கும் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. அந்த வகையில், கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.
மனநலப் பிரச்சினைகள் அனைத்து வயதுப் பிரிவினரையும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களையும் பாதிக்கக்கூடியவை என்பதால், சமூகத்தில் நிலவும் அச்சம் மற்றும் குறுகிய மனப்பான்மையை ஒழிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காகப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு பல விழிப்புணர்வுத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். மேலும், சிறைச்சாலைகள் போன்ற விசேட பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ளோரின் மனநல நிலைமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான ஆலோசனைகளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறோம்.
ஒவ்வொரு பாடசாலையிலும் மனநல ஆலோசகர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய, அத்தகைய ஆலோசகர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பினையும் எமது நிறுவனம் ஏற்றுச் செயற்படுகிறது. எமது தேசிய மனநல நிறுவனத்தில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெறுவதுடன், தினமும் 60 புதிய நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மருத்துவ அனுபவங்களை நாம் எதிர்காலச் சேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
எனினும், சிகிச்சை முடிந்தும் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள சுமார் 400 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 200 பேர் வரை உள்ளனர்.
எனவே, இவ்வாறான முதியவர்களுக்காக அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து பிராந்திய மட்டத்தில் புனர்வாழ்வு மையங்களை ஸ்தாபிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது. பொதுமக்கள் தங்களது மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் எப்போது வேண்டுமானாலும் 1926 என்ற விசேட சேவையைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.












.jpg)