ரூ.50,000க்கு சிறுத்தைப் பல்லை விற்க முயன்ற இளைஞர் பிணையில் விடுதலை!



மாத்தறை பகுதியில் சிறுத்தையின் பல் ஒன்றை 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேகநபர், மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், உடவலவை தேசிய பூங்காவின் பனாஹடுவ வனச்சரக பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட சிறுத்தைப்பல்லுடன் சந்தேகநபர் அன்றைய தினமே மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதவான் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இலங்கைச் சிறுத்தை வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு விலங்காகும் என வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை வைதிருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் செய்தல் என்பன கடுமையான சட்டவிரோதச் செயல்கள் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வனவிலங்கு தொடர்பான குற்றங்கள் குறித்து '1992' என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.