நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு 50 இலட்சம் ரூபா வரை விசேட இழப்பீடு!



நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அலுவலர்களுக்கு விசேட இழப்பீடுகள் வழங்கவும், சிறைச்சாலை தந்திரோபாய படையை வலுப்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இம் மோதல்களில் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கான சலுகைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் இழப்பீடுகளுக்கு மேலதிகமாக, உயிரிழந்த அலுவலர்களின் குடும்பங்களுக்கும் முழுமையாக இயலாமைக்குட்பட்ட அலுவலர்களுக்கும் தலா 5 மில்லியன் ரூபாவும், 100 சதவீதம் வருமான ஈட்டும் வலிமையை இழந்த பகுதியளவிலான இயலாமை கொண்ட அலுவலர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும், தற்காலிகமாக பகுதியளவில் இயலாமைக்குட்பட்ட அலுவலர்களுக்கு 3 மில்லியன் ரூபாவும் விசேட இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், சிறைச்சாலை தந்திரோபாய படைக்குச் சட்டபூர்வ அங்கீகாரமளிக்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், போதுமான தகுதியுடைய அலுவலர்களை ஆட்சேர்த்து அப்படையைப் பலப்படுத்துவதுடன், அவர்களுக்கு முறையான நவீன பயிற்சிகளையும் உபகரணங்களையும் வழங்குவதற்கும், தந்திரோபாய படைக்குத் தனியான தலைமையகம் ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.