மன்னார் மடு வீதியில் மரத்துடன் கார் மோதி விபத்து – 55 வயது பெண் உயிரிழப்பு; மூவர் காயம்!



மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கிப் பயணித்த நிலையில், மடு தேவாலயத்திற்கு சில கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்பு வீதியை விட்டு விலகிய கார் மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 55 வயதான பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.