
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 166 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட 1,594 குடும்பங்களை சேர்ந்த 5747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் முழுமையாகவும் 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களை பொறுத்தவரை காற்று மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனினும் மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் 60 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அதேவேளை, நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் அக்குரஸ்ஸ மற்றும் மாலிம்படி ஆகிய தாழ்நில பகுதிகளில் சிறிய அளவு வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெதுறுஓயா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், இரண்டு வான் கதவுகள் தலா 2 அடிகள் வீதமும் மற்றைய 2 வான் கதவுகள் 1 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 4000 கன அடி நீர் தெதுரு ஓயா ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







.jpg)




