டுபாய் வேலைவாய்ப்பு மோசடி – ‘டுபாய் சுத்தா’வுக்கு 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை, ஒரு இலட்சம் ரூபா அபராதம் !



டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்த டுபாய் சுத்தாவுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் ஒருலட்சம் ரூபா தண்டம் விதித்து குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுற்றுலா விசா மூலம் டுபாயில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட "டுபாய் சுத்தா" எனப்படும் ரன்தெட்டிகே நிஷ்சங்க பிரியதர்ஷன என்பவருக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2026.10.13 அன்று வழங்கப்பட்டது. இதன் போது சந்தேகநபருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதித்ததுடன், 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையையும் நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பிற்கு 7 லட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும், தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி இவர் 7 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுக்கொடுக்கவில்லை என கிரிவுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய ஒருவர் என்பதுடன் கடுவளை பகுதியில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்யச் சென்றபோது, புலனாய்வு அதிகாரிகளைத் தவிர்த்து தனது தனிப்பட்ட காரில் தப்பிச் செல்ல முயன்றபோதே கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தமை தொடர்பில் இந்த சந்தேகநபருக்கு எதிராக வெலிசர நீதிமன்றத்திலும் கடுவளை நீதிமன்றத்திலும் இது போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்யும் கடத்தல்காரர்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களுக்கு மீண்டும் அறிவிக்கிறது.

இதுபோன்ற முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 1989 என்ற துரித இலக்கத்திற்கோ அல்லது 0112882229 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.