பொரலஸ்கமுவையில் 74 வயது நபர் சுட்டுக்கொலை – துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 29 வயது நபர் கைது!



பொரலஸ்கமுவ பகுதியில் வீடொன்றினுள் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்தவர் என கருதப்படும் சந்தேக நபர் (வயது 29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை (9) மாகும்புர சுதந்திர மாவத்தை அருகில் வைத்து, ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத 2 பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு உதவி செய்தவர் என்றும் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என்றும் கருதப்பட்ட சந்தேக நபரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாணத்தின் தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.