தரம் 7 மாணவனைத் தாக்கியதாக அதிபர் மீது குற்றச்சாட்டு – பொலிஸில் முறைப்பாடு


பண்டாரகம, வெல்மில்ல பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர், தரம் 7 மாணவன் ஒருவரைத் தாக்கியதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிபர் தனது இரு கைகளாலும் மாணவனின் கன்னங்களில் பலமுறை அறைந்ததாக மாணவனின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலி காரணமாகப் பல் துலக்கக்கூட முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன் முதலில் வெத்தர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை பண்டாரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறிப்பு: அதிபர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இச்செய்தி வெளியாகியுள்ளது.