சீரற்ற காலநிலையால் 9 பேர் பலி; 6,754 பேர் பாதிப்பு!



நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 1,876 குடும்பங்களைச் சேர்ந்த 6,754 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரால் 06 வீடுகள் முற்றாகவும், 1,209 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவற்றுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கொழும்பு மற்றும் காலி வழியாக சிலாபம் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மழையின் போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகள் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும். எனவே, அப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், அக்குரணை நகரில் சிறிய அளவிலான நீர் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வெல்லவாய - கிரிந்தி ஓயாவின் நீர்ப்பிடிப்புப் பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையால் அதன் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்திவரும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில், நுவரெலிய மாவட்டத்தில் பொகவந்தலாவை பிரதேசத்திற்குப் பெய்த மழையினால் கெசல்கமுவ ஓயா வழிந்தோடி பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பிரதான வீதிகளும் நீரினால் மூழ்கியதால் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் 13 இன் வான்கதவுகள் மற்றும் மத்திய நீர்த்தேக்கங்கள் 7 இன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. எனினும், நில்வள கங்கையைத் தவிர வேறு எந்தவொரு கங்கையிலும் பெருவெள்ள அபாயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.