ஞானசார தேரர் கைதாவதிலிருந்து தப்பிக்க உதவியதாக வங்கி அதிகாரி மீது குற்றச்சாட்டு – 9ஆம் திகதி வரை விளக்கமறியல்


மூன்று நீதிமன்றங்களால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வங்கி அதிகாரி ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

களனி பகுதியைச் சேர்ந்த குறித்த வங்கி அதிகாரி, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்த தகவலின்படி, ஞானசார தேரருக்கு எதிராக கைதுசெய்வதற்கான பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அறிந்திருந்த போதிலும், சந்தேகநபர் தனது வாகனத்தில் அவரை இராஜகிரியவில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையில் இருந்து ஞானசார தேரர் தப்பிச் செல்ல உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

விசாரணைகள் இதுவரை நிறைவடையாத நிலையில், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.