ஞானசார தேரரின் 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம் – உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு



ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் உரையாற்றிய குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (07) புதன்கிழமை திறந்த நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 09 மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் 1,500 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து, நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

எனினும், மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை 2027 பெப்ரவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.