பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும் – ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்!



அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் மூலம் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும். இது நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல, பிரித்தானியர்களால் கண்டித் தலைவர்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மிஹிந்தலை மிஹிந்து மகா சயையின் புதிய சிகரக் கலசமும், சூடாமணியும் திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்று நவீன நாடுகளான இலங்கைச் ஜனநாயகச் சோசலிசக் குடியரசிலும் தாய்லாந்து இராச்சியத்திலும் நாம் பௌத்த மதத்தை ஒரே விதமாகவே நடத்துகிறோம். நமது நாட்டிலும் தாய்லாந்திலும் ஒவ்வொரு மதமும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையும், எவரும் தாம் பின்பற்றும் மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது என்பதையும், மதத்தின் அடிப்படையில் எவருக்கும் பாகுபாடு காட்ட முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் ஊடாக பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும். இது நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல, பிரித்தானியர்களால் கண்டித் தலைவர்களுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும், இதை வரைவு செய்ய நாம் செல்லவில்லை. 1954 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மன்னரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியும் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது இது கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

அதேபோன்று தாய்லாந்திலும், நம்மைப் போலவே மதச் சுதந்திரம் நிலவுகிறது, இறையாண்மை மக்களிடமே உள்ளது. ஆனால் அந்த இறையாண்மை மக்கள் சார்பில் மன்னராலே நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதனூடாக சட்டவாக்க அதிகாரம் தேசிய சபைக்கும், நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவைக்கும், நீதித்துறை அதிகாரம் நீதிமன்றங்களுக்கும் உரித்தாகிறது. மக்கள் சார்பில் இறையாண்மையை நடைமுறைப்படுத்தும் மன்னர் ஒரு பௌத்தராக இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மன்னர் ஒரு பௌத்தராகச் செயற்படுவதுடன், நான் கருதும் வகையில் 67 ஆவது உறுப்புரையின் கீழ் பௌத்த மதத்தைப் பாதுகாத்து உறுதிப்படுத்த வேண்டும் என அவரின் ஆலோசனைகளும் கிடைக்கப்பெறுகின்றன. எனவே நமது அனைத்து நாடுகளும் சமமானவையாகும், கம்போடியாவின் நிலைமையும் இதுவேயாகும். நமக்கு மதச் சுதந்திரம் உள்ளது, அதேவேளை நாம் பௌத்த மதத்தையும் பாதுகாக்கிறோம். நாம் அனைவரும் ஒன்று எனக் கூறுவது இதனாலேயேயாகும், அதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் இவ்வாறு மிகவும் புண்ணியம் நிறைந்ததொரு இடத்திற்கு வருகை தந்துள்ள இத்தருணத்தில், மிஹிந்து மகா அரஹந்த தேரரின் பரிநிர்வாணம் நினைவுகூரப்படும் இந்த வேளையில், நாம் இன்று மீண்டும் இந்தத் தூபியின் கோபுரத்தை திறந்துவைப்போம் . தாய்லாந்து மக்களின் முயற்சியினாலேயே இதனைச் செய்ய முடிந்ததுடன், பிரதிப் பிரதமரும் அதனை இங்கு கொண்டு வந்தார்.

எனவே நாம் தாய்லாந்து மக்களுக்கும் பிரதிப் பிரதமருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், இதனால் கிடைத்த அனைத்துப் புண்ணியங்களும் தாய்லாந்தின் மன்னருக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்றார்.