அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவூதி மன்னருக்கு பௌத்த தேரர் நன்றி!



இஸ்லாம் சமயத்தை நிந்தனை செய்யும் விதத்தில் சமூக ஊடகத்தில் கருத்துப் பதிவு செய்தமைக்காக சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா மீதான தண்டனையை,சவூதி உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளமைக்காக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் மற்றும் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்துக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி மற்றும் மரியாதையை தெரிவிப்பதாக பானகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தையும் இறைதூதர் முஹம்மது நபியையும் அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்காக, சவூதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கை யைச் சேர்ந்த இளைஞரான அனோஜன் சிவராசனுக்கு அந்நாட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

இதற்காக சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கு, அந்நாட்டுக்கு விஜயம் செய்த முதல் பௌத்த துறவி என்ற வகையிலும், அனோஜனுக்காக மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தவர் என்ற வகையிலும், இலங்கை மக்களுடன் இணைந்து இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பானகல உபதிஸ்ஸ தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பானகல உபதிஸ்ஸ தேரர் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவராகவும், ஜப்பானின் சவரா லங்கா ஜீ விகாரை, இந்தியாவின் சாஞ்சி சேதியகிரி விகாரை மற்றும் மாளிகாகந்த அக்ரஸ்ராவக மகாவிகாரை ஆகியவற்றின் விகாராதிபதியாகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.