
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட தனது செல்லப்பூனை காணாமல்போயுள்ளதாக இலங்கைப் பெண்ணொருவர் தெரிவித்து, அதனைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி துபாயிலிருந்து கொழும்பு நோக்கி UL226 விமானத்தில் பயணிக்கத் தயாராகியிருந்த குறித்த பெண், தேவையான ஆவணங்களைப் பூர்த்திசெய்து, கட்டணங்களையும் செலுத்தி, தனது ‘சூட்டி’ (Chuuti) என்ற செல்லப்பூனையை விமான நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
எனினும், குடிவரவு நடைமுறைகளை முடித்த பின்னர், பூனை அதன் கூண்டிலிருந்து காணாமல்போயுள்ளதாகத் தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் விமானத்தில் ஏற மறுத்த அவர், சுமார் 28 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்து தனது செல்லப்பூனையைத் தேடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் CCTV கமராக்கள் இல்லை எனத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து போதிய உதவிகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது செல்லப்பூனை எவ்வாறு காணாமல்போனது என்பது தொடர்பில் உரிய விளக்கத்தையும், அதனைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் அவர் கோரியுள்ளார்.
‘சூட்டி’ பூனையைப் பார்த்தவர்கள் அல்லது கண்டுபிடித்தவர்கள் பின்வரும் இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
WhatsApp: +971 588 171 458
தொலைபேசி: +971 567 725 796 / +971 567 827 796







.jpg)




