.jpg)
நாட்டில் எந்தவொரு நபரின் தகுதியோ அல்லது பதவி நிலைகளோ பொருட்படுத்தாமல், சட்டம் அனைவருக்கும் நியாயமாகவும் சமமாகவும் செயற்படுத்தப்படும். குறிப்பிட்ட ஒரு நபரை இலக்குவைத்துச் சட்டத்தை வளைப்பதையோ அல்லது செயற்படுத்தாமல் விடுவதையோ மக்கள் எமது அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் சட்டம் சாதாரண பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், பலம் வாய்ந்தவர்களுக்கு மற்றொரு விதமாகவும் செயற்படுத்தப்பட்டமையே மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கான முக்கிய காரணமாகும். இதனைக் கருத்திற்கொண்டுதான், எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் சட்டம் நியாயமான முறையில் செயற்படுவதை உறுதிப்படுத்த இந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
யாருடைய தராதரங்களையும் கருத்தில் கொள்ளாமல், சட்டத்தின் மேலாதிக்கம் நாட்டில் பலமாக நிலைநாட்டப்படும். இது தற்போது சர்வதேச நாடுகளின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிரான வழக்கு முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான அவகாசங்களும் சட்டபூர்வமான வழிகளும் உரிய முறையில் காணப்பட்டன.
அனைத்து நீதிமன்றச் செயற்பாடுகளும் நிறைவடைந்த பின்னரே இந்த நிலை உருவாகியுள்ளது.
எனவே, சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட நடைமுறைகள் அனைவருக்குமே பொதுவான முறையில் செயற்படுத்தப்படுமே தவிர, எந்தவொரு தனிநபருக்காகவும் சட்டம் மாற்றப்பட மாட்டாது என்றார்.







.jpg)




