
இன்று நாமல் ராஜபக்ஷவுக்கு நடப்பது நாளை உங்களது மகனுக்கும் நடக்கும் என்று சாகர காரியவசம் கூறுவது, தவறான அரசியலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு தெளிவற்ற மற்றும் ஆபத்தான முயற்சி என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஏனைய இளைஞர்கள் மற்றும் மகன்கள் அனைவரும் நாமல் ராஜபக்ஷவைப் போல அரசாங்கப் பணத்தைச் சுரண்டியவர்களோ அல்லது எயார் பஸ் ஒப்பந்தங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் அல்லது இலஞ்சம் பெற்றவர்களோ அல்ல என்று வலியுறுத்தினார்.
நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல் பலத்தையோ அரசாங்கச் சலுகைகளையோ நம்பியிராமல், தங்களது சொந்த உழைப்பை மட்டுமே நம்பி நேர்மையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எப்போதுமே அரசாங்கப் பணத்தில் வாழும் ஒட்டுண்ணிகள் அல்ல.
மாறாக நாட்டின் பொருளாதாரத்திற்குத் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வரும் உழைக்கும் வர்க்கத்தினராவர். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களால் நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நடத்தப்படும் முறையான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சட்ட ரீதியான நிலைமை நாட்டின் சாதாரண, நேர்மையான இளைஞர்களுக்கு ஒருபோதும் ஏற்படாது என்றும், மக்கள் நிதியைத் திருடிய வேறு யாரேனும் அரசியல்வாதிகள் அல்லது நபர்கள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இத்தகைய நிலைமை வரும்.
குறுகிய அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்களிடையே இதுபோன்ற பிழையான அச்சத்தையும் தவறான முன்னுதாரணங்களையும் பரப்ப வேண்டாம் என்றார்.












.jpg)