உலக முட்டை தினத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 25 முட்டைகள் அடங்கிய பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
மற்றும் திருக்கோவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இவ்விசேட நிகழ்வு இன்று (09) காலை தம்பிலுவில் 01, கிழக்கு கிளீனிக் சென்டரில் நடைபெற்றது.
திருக்கோவில் அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் U. கதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, “சிறிய முட்டை... பெரிய நன்மைகள் – ஆரோக்கியமான நாளைக்காக முட்டைகளை உட்கொள்வோம்!” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய உயர்தரப் புரதச்சத்து மற்றும் ஏனைய போசாக்கு நன்மைகள் தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, கருவின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுதல், கண் ஆரோக்கியத்தைப் பேணுதல், நோய் எதிர்ப்புச் சக்தியை ஆதரித்தல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணுதல் உள்ளிட்ட முட்டை உணவின் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 25 முட்டைகள் அடங்கிய பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருக்கோவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தி, தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

























.jpg)

