சமாதானம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் ; தேசிய ஒற்றுமை என்பது இனவாதம் அல்ல – மைத்திரிபால சிறிசேன


சமாதானத்தை உலகிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. முதலில் வீட்டில் சமாதானம், பின்னர் அயலவருடன், பிரதேசத்தில், நாட்டில் என சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். தேசிய ஒற்றுமை என்பது இனவாதம் அல்ல. சர்வதேச உறவுகள், வெளிநாட்டுக் கொள்கை மற்றும் இராஜதந்திர உறவுகளிலும் சமாதானம் வலுப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து, சக தலைவர்களுடன் இணைந்து நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தார். பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இலங்கையிலும் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தனது வீட்டிலேயே காவியுடை அணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

உலகத்துக்காக அர்ப்பணித்த தலைவர்கள் பலர் சமாதானத்துக்காக பாடுபட்டுள்ளனர். ஆனால் சமாதானத்தை விரும்பாதவர்களுக்கும் சமாதானத்தை விரும்புபவர்களுக்கும் இடையிலான முரண்பாடே இன்றைய உலக நெருக்கடிகளுக்கு காரணமாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்ப அறிவை கற்று, அதனை மனித சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டிய இளைஞர்கள், அதே தொழில்நுட்பம் அழிவுக்கான ஆயுதங்களாக பயன்படுத்தப்படுவதையும் காண்கின்றனர்.

இலங்கையில் சுமார் 30 ஆண்டுகள் நீடித்த யுத்தத்துக்குப் பின்னர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நான் பெரும் முயற்சி செய்தேன். வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச் சென்றபோது மிகவும் வறுமையில் வாழ்ந்த மக்களின் வீடுகளுக்குள் சென்று, அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையும் நேரடியாக அறிந்துகொண்டேன். பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் மனிதனை நல்ல மனிதனாக மாற்றுவதையே போதிக்கின்றன.

சமாதானத்தை உலகிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. முதலில் வீட்டில் சமாதானம், பின்னர் அயலவருடன், பிரதேசத்தில், நாட்டில் என சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். தேசிய ஒற்றுமை என்பது இனவாதம் அல்ல. சர்வதேச உறவுகள், வெளிநாட்டுக் கொள்கை மற்றும் இராஜதந்திர உறவுகளிலும் சமாதானம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

யுத்தம் தொடர்பில் இதுவரை பக்கச்சார்பற்ற முழுமையான வரலாற்று நூல் எழுதப்படவில்லை. யுத்தம் எவ்வாறு ஆரம்பமானது, வெற்றிகள், தோல்விகள், பின்னடைவுகள் மற்றும் இறுதி வெற்றி ஆகியவை பக்கச்சார்பின்றி பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்கால தலைமுறையினர் வெளிநாடுகளில் வெளியிடப்படும் ஒருதலைப்பட்சமான நூல்களையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும்.

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் மறந்துவிடக்கூடாது. யுத்தத்தின் கொடூரத்தை நான் நேரடியாக கண்டுள்ளேன். குறிப்பாக 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு யுத்தத்தின் உண்மை நிலைமை தொடர்பில் போதிய அறிவில்லை. இந்தியாவில் வரலாறு தொடர்ந்து மக்களுக்கு எடுத்துக்கூறப்படுகிறது. ஆனால் இலங்கையில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் இருந்தபோதிலும், யுத்த வரலாற்றை பக்கச்சார்பின்றி விளக்கும் முயற்சிகள் போதியளவில் இல்லை. மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சமாதானம் அவசியம். அதற்கான ஆரம்பம் மனித மனத்திலிருந்தே இருக்க வேண்டும்.

யுத்தத்துக்குப் பின்னர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது யுத்தத்தை விட கடினமான பணியாகும்;. போர்க்களத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் அனுபவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அறிந்த உண்மைகள் எதிர்கால சந்ததியினருக்கு சென்றடைய வேண்டும்.

சமாதானத்தை உருவாக்குவதில் மதகுருமார்கள், மத அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் பொறுப்பு உள்ளது. மனித மனதில் மாற்றம் ஏற்படாமல் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என்றார்.