மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குக் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (28) புதன்கிழமை இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் சொத்து சேதங்களைக் குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஆலோசனைகள்:
பாதுகாப்பான இடங்கள்: இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கட்டிடங்களுக்குள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும். மரங்களின் கீழ் ஒருபோதும் தஞ்சமடைய வேண்டாம்.
திறந்த வெளிகளைத் தவிர்த்தல்: நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகளில் நிற்பதைத் தவிர்க்கவும்.
மின்சார மற்றும் தொலைபேசி பயன்பாடு: கம்பியினாலான தொலைபேசிகள் மற்றும் மின் இணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைக் தவிர்க்கவும்.
திறந்த வாகனங்கள்: இருசக்கர வாகனங்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனப் பயன்பாட்டைக் கைவிடவும்.
அவசர உதவி: வீழ்ந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும். அவசர உதவிகளுக்கு உள்ளூர் அனர்த்த மேலாண்மை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.







.jpg)




