
சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் முற்றிலும் நிராகரித்துள்ளது.
எந்தவொரு குழுவின் அழுத்தங்களுக்கும் பணிந்தோ அல்லது சட்டத்தை மீறியோ ஜனாதிபதி முடிவுகளை எடுக்கமாட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியின்படி, 'சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தின் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டுமே தவிர, நீதிமன்றத்திற்கு வெளியே அல்ல' என்று அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்தால், அது இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள பிறரும் மன்னிப்பு கோருவதற்கான தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், ஜனாதிபதி அதற்கு உடன்படமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஞானசார தேரர் இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார், அத்துடன் அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த அனைத்து வழக்குகளிலிருந்தும் விலக்களிக்கும் வகையில் அவருக்கு ஒட்டுமொத்த பொதுமன்னிப்பு வழங்குவது சாத்தியமில்லை' என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ அச்சுறுத்தி தீர்மானங்களை எடுக்க வைக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், 'அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இன அல்லது மத பதற்றங்களைத் தூண்ட முயற்சிப்பவர்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டார்கள்' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.








.jpg)



