பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாக அளித்த வாக்குறுதிக்கு விரோதமாக அதனைப் பதிலீடு செய்யும் வகையில் அச்சட்டத்தை விடப் பாரதூரமான உள்ளடக்கத்தைக் கொண்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தேர்தலுக்கு முன்பதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் செவ்வாய்க்கிழமை (6) பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் நேற்று காலை நடைபெற்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. அதுமாத்திரமன்றி கடந்த அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு உள்ளிட்ட புதிய வரைவுகள் முன்மொழியப்பட்டபோது, பயங்கரவாதத் தடைச்சட்டம் எவ்வித பதிலீடுமின்றி முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாக இருந்தது.
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் முன்னைய அரசாங்களினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான சட்ட வரைவுகள் முன்மொழியப்பட்ட சந்தர்ப்பங்களில், அது பற்றிக் கலந்துரையாடுவதற்காகச் சென்றோம். 'புதிய சட்டமொன்று வேண்டாம். அதற்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம்' என்ற நிலைப்பாட்டில் இருந்த தேசிய மக்கள் சக்தி அந்தக் கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவில்லை. அதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்டமூலம் முன்மொழியப்பட்ட வேளையில், அதற்கு எதிராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோரே உயர்நீதிமன்றத்தை நாடினர்.
அவ்வாறு புதியதொரு சட்டம் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த அரசாங்கம், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முற்றிலும் விரோதமானதாகும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் மிகப் பாரதூரமான விடயங்களே இப்புதிய சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினார்.













.jpg)