
ஈரானிய கப்பல்களை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிவிப்பு இலங்கையை மட்டும் இலக்கு வைத்து வெளியிடப்பட்ட ஒன்றல்ல. எவ்வாறிருப்பினும் நாம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (6) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த ஈரானிய கப்பல்கள் எமது கடல் எல்லையிலோ அல்லது எமது எல்லைக்குள்ளோ இல்லை. இந்தியப் பெருங்கடல் போன்ற ஒரு சர்வதேசக் கடல் பகுதியில் இதுபோன்று ஏராளமான கப்பல்கள் இருப்பது வழக்கமானதுதான். குறிப்பாக, உலகில் போர்ச் சூழல் நிலவும்போதும், நீரிணைகளில் பிரச்சினைகள் எழும்போதும் இவ்வாறான கப்பல்கள் பல பகுதிகளிலும் பயணிப்பதைப் பார்க்க முடியும்.
இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிவிப்பு இலங்கையை மட்டும் இலக்கு வைத்து வெளியிடப்பட்ட ஒன்றல்ல. போர்ச் சூழலில் அமெரிக்காவும் ஒரு தரப்பாக உள்ளது. அவர்கள் ஒரு நாடாகத் தங்களது நிலப்பாட்டைத் தெரிவிக்கிறார்கள். உலகிலுள்ள எந்தவொரு நாட்டுக்கும், இவ்வாறான விநியோகங்களைச் செய்தால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படலாம் என்றே தெரிவித்துள்ளனர்.
நாம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், நமது நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே நாம் முடிவுகளை எடுப்போம். இதற்கு முன்னரும், போரின் கடுமையான காலகட்டங்களில் நாம் மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் முடிவுகளை எடுத்தோம்.
நாம் எந்தவொரு தரப்பிற்கும் சார்பாகச் செயல்படவில்லை; யாருக்கும் தேவையற்ற வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை. இரு தரப்பினரும் நம்மிடம் உதவிகளைக் கோரியிருந்தனர். ஆனால், மனிதநேய அடிப்படையில் மட்டுமே இந்த விவகாரத்தில் தலையிட்டு, போரில் ஈடுபட்ட எந்தத் தரப்பாக இருந்தாலும் உயிர்களைப் பாதுகாக்கும் வகையிலேயே ஜனாதிபதியும் அரசாங்கமும் செயல்பட்டனர்.
எனவே, இந்த முறையும் நமது நாட்டின் பாதுகாப்பையும், நமது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே செயல்படுவோம். இது இலங்கைக்காக மட்டும் பிரத்யேகமாகக் கூறப்பட்ட செய்தி அல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான அறிவிப்பாகும். எனினும் நாமும் இதில் கவனமாக இருப்பது சிறந்தது. இதுவரை சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடம் இருந்து எம்மிடம் எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை.
ஒரு நாடாக நாம் நமது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே முவுகளை எடுக்க வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாப்பைப் பணயம் வைக்க முடியாது. மேலும், இந்தக் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள்ளும் இல்லை. எனவே, அரசாங்கம் என்ற முறையில் நாட்டின் நலனையும், மக்களின் பாதுகாப்பையும் முன்னிறுத்தியே நாம் செயல்படுவோம் என்றார்.












.jpg)