நாடளாவிய அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் – கல்வி அமைச்சு திட்டம்



நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவவா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டின் பல்வேறு முன்பள்ளிகளில் வெவ்வேறு கல்வித் திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அவற்றுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் முன்பள்ளி அமைந்துள்ள பிரதேசம் அல்லது அதன் நிர்வாக முறையைப் பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரத்திலான அடிப்படை கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாட்டின் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்துவதுடன், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியின் தரத்திலும் ஒருமைப்பாட்டிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சீர்திருத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கான விரிவான திட்டமிடல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், புதிய பாடத்திட்டத்தை சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு மாற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பள்ளிக் கல்வியில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் எதிர்கால கல்விப் பயணத்துக்குத் தேவையான அடிப்படை அறிவு மற்றும் திறன்களை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு வழங்க முடியும் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.

இந்த சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் இலங்கையின் கல்வித்துறையின் தரத்தையும் ஒருமைப்பாட்டையும் மேலும் மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்றார்.