ஷிரந்தி ராஜபக்ஷ கைது முதல் விளக்கமறியல் வரை முன்வைக்கப்பட்ட வாதங்கள் !
சிரிலிய சவிய' கணக்கில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (7) உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட கணக்கு தொடர்பான முறைகேடு குறித்துக் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) அண்மையில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்கியது.
அதற்கமைய, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகச் செப்டம்பர் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அச்சிகிச்சை முடிந்த பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றார்.
அதன்பின்னர் அவர் ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலை நாடு திரும்பிய நிலையில், ஒக்டோபர் 13 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், 'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான மற்றொரு விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று காலை, நாரஹேன்பிட்டி பூர்வாராம வீதியிலுள்ள ஷிரந்தி ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்றனர்.
காலை 8.00 மணியளவில் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வீட்டிலேயே இருந்தார்.
சுமார் இரண்டு மணி நேர வாக்குமூலப் பதிவின் பின்னர், ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேவேளை, 'சிரிலிய சவிய' கணக்கு விசாரணைகள் தொடர்பாகத் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவின் கணவருமான பிரதீப் காரியவசமும் இன்று இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
ஆணைக்குழுவில் சுமார் 6 மணிநேர வாக்குமூலப் பதிவிற்குப் பிறகு, சந்தேகநபர்களான ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பிரதீப் காரியவசம் ஆகியோர் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த நேரத்தில் முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
சந்தேகநபர்களின் கைது குறித்து நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள், "கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக எனக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்த 10 மில்லியன் ரூபாய் அரசாங்கப் பணத்தை உரிய நடைமுறைகளை மீறி 'சிரிலிய சவிய' அமைப்பிற்கு வழங்கியமை மற்றும் அத்தொகையைக் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இரு சந்தேகநபர்களுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் உதவிச் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி யஷ்மதா லொகுநாரங்கொட நீதிமன்றத்தில் ஆஜராகி,
"2015 இல் ஊழல் எதிர்ப்பு முன்னணி அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் பேரிலேயே இவ்விசாரணை தொடங்கியது. மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிலுள்ள 'சிரிலிய சவிய' கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பானது இதுவாகும்.
பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு இணைந்து கூட்டு விசாரணை நடத்தின. அதில், 2010 ஆம் ஆண்டு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் இயந்திரம் வாங்க எனக் கூறி சந்தேகநபர் ஷிரந்தி ராஜபக்ஷ செய்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு அமைய, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் 'சிரிலிய சவிய' கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
அப்போதைய வங்கியின் தலைவர் முதலாம் சந்தேகநபர் பிரதீப் காரியவசம் ஆவார். வழக்கமான நடைமுறைகளுக்குப் புறம்பாகவே இந்த நிதி வழங்கப்பட்டதாக வங்கியின் அன்றைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பிரதீப் காரியவசம் இலஞ்சச் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் ஊழல் குற்றத்தையும், இரண்டாம் சந்தேகநபர் ஷிரந்தி ராஜபக்ஷ அதற்குத் துணைபோனமை மற்றும் அந்த நிதியைத் தனது சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியமை மூலம் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றத்தையும் இழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இக்கணக்கில் இந்த 10 மில்லியன் ரூபாய் மட்டுமன்றி, அன்றைய வெளிவிவகார அமைச்சிலிருந்து 8.8 மில்லியனும் ஹுவாவி (Huawei) நிறுவனத்திலிருந்து 22 மில்லியனும் வைப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்த சட்டத்தின் கீழும் விசாரணைகள் நடப்பதுடன், தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த நிதியைக் கொண்டு டொரிங்டன் பகுதியில் வீடு ஒன்று வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
எனவே, இரண்டாம் சந்தேகநபருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் 8(1) பிரிவின் கீழ் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோருகிறோம்" என்றார்.
தொடர்ந்து, சந்தேகநபர் பிரதீப் காரியவசத்திற்காக ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸ பிணை மனுவை முன்வைத்தார்.
"எனது கட்சிக்காரர் மீது இலஞ்சச் சட்டத்தின் 'ஊழல்' குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது. இது பிணை வழங்கக்கூடிய குற்றமாகும். சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகே எனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். இடைப்பட்ட காலத்தில் அவர் சாட்சிகளுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படவில்லை.
அவர் 2023 முதல் 'Sleep Apnea' நோய்க்காகச் சிகிச்சை பெறுகிறார். தலையில் 3 கட்டிகள் உள்ளன. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு எனப் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளாரைக் கருத்திற் கொண்டு பிணை வழங்குமாறு கோருகிறேன்." என்றார்.
அடுத்து, ஷிரந்தி ராஜபக்ஷவிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பிணை மனுவை முன்வைத்தார்,
"சிரிலிய சவிய' என்பது 2006 முதல் செயல்படும் அரசு அங்கீகாரம் பெற்ற நலன்புரி அமைப்பாகும். தேசிய சேமிப்பு வங்கி தமது சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலமே பணத்தை வழங்கியது. மறுக்கவில்லை, அத்தொகை இன்றும் அதே சுதுவெல்ல கிளையின் கணக்கில் அப்படியே உள்ளது.
ஏனெனில் சி.டி. ஸ்கேனர் வாங்க ரூ. 160 மில்லியன் தேவைப்பட்ட நிலையில், 2014 வரை ரூ. 42 மில்லியனே சேர்ந்தது. 2014 இல் ஆட்சி மாற்றத்தின் போது புகார் அளிக்கப்பட்டு கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. ரூ. 160 மில்லியன் இயந்திரத்தை 42 மில்லியனுக்கு வாங்க முடியாததாலேயே அதை வாங்க முடியவில்லை; தவறு எதுவும் நடக்கவில்லை.
கணக்கின் முடக்கம் நீக்கப்பட்டால் தேசிய சேமிப்பு வங்கி அத்தொகையைத் திரும்பப் பெற முடியும். துரதிர்ஷ்டவசமாக ராஜபக்ஷ என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனது கட்சிக்காரர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டுதான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். 73 வயதான இவர், 2019 முதல் இதய நோயாளி, மூளை மற்றும் முதுகெலும்பு கோளாறுகளும் உள்ளன. இவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" என வாதாடினார்.


.jpg)










