கனிம மணல் அகழ்வு தொடர்பான முதலீட்டு முன்மொழிவுகள் – சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விசேட கலந்துரையாடல்



கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கனிம மணல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எஸ்.சி. ஜகத் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், கனிம மணல் அகழ்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள காணிகள் அரசாங்கத்திற்கோ அல்லது அரச நிறுவனங்களுக்கோ சொந்தமானவையாக இருந்தால், அக்காணிகளில் கனிம அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) திருமதி ஜெ. ஸ்ரீபதி, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், குச்சவெளி பிரதேச சபையின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.