
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடன் ஒக்டோபர் 09 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறியதாவது,
"கல்வித் துறையில் பண்புசார் மற்றும் கட்டமைப்புசார் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க கொள்கைகளுக்கும் முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
குறிப்பாக, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எண்ணக்கருத் தாள் , தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (National Curriculum Framework) மற்றும் 1 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான மாணவர் மதிப்பீட்டு வடிவமைப்பு ஆகியவற்றுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
அத்துடன், உயர்தரத்துக்கான மதிப்பீட்டு வடிவமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. தேசிய கல்விச் சபையை (Education Council) அமைப்பதற்கான அறிக்கையையும் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதற்குரிய வரைவைத் தயாரிப்பதற்காகக் கல்வி அமைச்சின் மூலம் குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று, கல்வித் துறையை டிஜிட்டல்மயமாக்கும் கொள்கை, தேசிய கல்வி ஆணைக்குழுவின் அனுமதியின் பின்னர் தற்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாடசாலைக் கல்வியில் டிஜிட்டல் துறையை வளர்ப்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கான 96 பில்லியன் ரூபா திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது; அதற்கும் கொள்கையளவிலான அனுமதி கிடைத்துள்ளது.
அரச மற்றும் அரச சார்பற்ற ஆகிய இரு துறைகளிலும் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் (Quality Assurance) செயற்றிட்டத்தை வலுப்படுத்துவதற்காக உபகுழுவொன்று செயற்பட்டு வருகின்றது.
உயர்தரத்தை நிறைவுசெய்யும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் (NCOE) மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்கும்போது ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, உயர்கல்வித் தெரிவுகள் அனைத்துக்கும் ஒரே வலையமைப்பினூடாக விண்ணப்பிக்கக்கூடிய 'ஒருங்கிணைந்த சேர்க்கைக் கொள்கை' ஒன்றைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2028 ஆம் ஆண்டு முதல் முன்னோடித் திட்டமாக இம்முறையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையில் பொறியியல், மருத்துவம் (பாடநெறிகள் மற்றும் பட்டப்பின் கல்வி), விவசாயம் ஆகிய துறைகளுக்கான கொள்கைகளைத் தயாரிப்பதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், பட்டங்களை வழங்குவதற்கான அந்தஸ்தை வழங்குதல் தொடர்பான வழிகாட்டுதல்களைக் கொண்ட புதிய கொள்கைக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன இங்கு தெரிவித்தார்.
மாணவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனுக்காக ஐந்து பிரிவுகளின் கீழ் (1–2, 3–5, 6–7, 8–10 மற்றும் 11–13 ஆம் ஆண்டுகள்) வழிகாட்டல் தொடரொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய முன்னோடித் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்திலும், முழுமையான நடைமுறைப்படுத்தல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
தொழிற்கல்வித் (TVET) துறையைத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்பப் புதுப்பித்தல், நவீனமயமாக்கல், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தொழிற்சாலைசார் பயிற்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான நான்கம்ச மூலோபாயத் திட்டமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்த்தல், ஆசிரியர் இடமாற்றங்களை முறைப்படுத்துதல், பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்தல், மாணவர்களின் உடல்நலத்துக்காக விளையாட்டு மற்றும் செய்முறைச் செயற்பாடுகளை மேம்படுத்துதல், மாணவர்களின் ஊட்டச்சத்தையும் சுகாதாரத்தையும் உயர்த்துதல் உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த பல விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.












.jpg)