
நாட்டில் வர்த்தக சமூகம் மற்றும் சிறிய,நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வங்கி அமைப்பிலிருந்து நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொள்கை அடிப்படையில் தீர்வு முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது வியாபாரம் செய்து வரும் நபர்களுக்கும் புதிய தொழில் முயற்சியாளர்களும் வியாபாரத்தை விரிவாக்குவதற்கு அல்லது புதிதாக ஆரம்பிப்பதற்கு வங்கி கடன் தேவைப்படுகிறது. எனினும், கடன் விண்ணப்பத்தின் போது கடன் தகவல் பணியகத்தின் அறிக்கையைப் பரிசீலிப்பதால், கடந்த காலத்தில் கடன் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு,பின்னர் அக்கடனை முழுமையாகச் செலுத்தி முடித்த நபர்களுக்கும் மீண்டும் கடன் பெறும்போது கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கடன் தகவல் பணியகம் எவரையும் 'கருப்புப் பட்டியலில்' சேர்ப்பதில்லை என்றபோதிலும்,செலுத்தி முடிக்கப்பட்ட கடன்கள் தொடர்பான கடந்தகால தகவல்கள் 5 ஆண்டுகள் வரை அறிக்கையில் இருப்பதால்,அது தற்போதைய கடன் பெறும் திறனைப் பாதிக்கிறது. இதற்குப் பிற நாடுகளிலிருந்தும் முன்னுதாரணங்களைப் பெற முடியும்.
மலேசியாவின் மத்திய கடன் தகவல் அமைப்பில் கடனை அடைத்து முடித்தவுடன் அந்நிலைமை உடனடியாகப் புதுப்பிக்கப்படுவதுடன்,பிரதானமாக கடந்த 12 மாத கால கடன் திருப்பிச் செலுத்தும் தன்மையே காணப்படுகிறது. எனவே, 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம், கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு 5 வேலை நாட்களுக்குள் கடன் தகவல் பணியகத்தின் அறிக்கையைப் புதுப்பித்தல். செலுத்தி முடிக்கப்பட்ட கடனை 'முழுமையாக அடைக்கப்பட்டது' எனத் தெளிவாகக் குறிப்பிடுதல். பழைய கடன் சிக்கலை மட்டும் கருத்திற் கொள்ளாமல், தற்போதைய வருமானம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடனை மதிப்பிடுமாறு வங்கிகளுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.
இலங்கையின் கடன் தகவல் அறிக்கையில் கடந்தகாலத் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் காலப்பகுதியை சர்வதேச முன்னுதாரணங்களைக் கருத்திற் கொண்டு 2027 ஆம் ஆண்டிற்குள் மறுபரிசீலனை செய்தல். அனைத்துக் கடன் பொறுப்புகளையும் செலுத்தி முடித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு மீண்டும் வியாபாரத்தை ஆரம்பிக்க 'இரண்டாம் வாய்ப்பு கடன் திட்டத்தை' அறிமுகப்படுத்துதல் வேண்டும் ஆகிய குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.








.jpeg)
.jpg)


