இலங்கை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க முடியும் – மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!



இலங்கை தற்போது நிதிமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு என்பவற்றை தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பான பரஸ்பர மதிப்பீட்டுக்கு உட்பட்டுள்ள நிலையில், நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் எமது நாடு மீண்டும் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாங்கொக் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் 'பணத்தூயதாக்கல் மற்றும் நிதி மோசடி எதிர்ப்பு' தொடர்பில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் மதிப்பீட்டை இலக்காகக்கொண்டு இலங்கை முன்னெடுத்திருக்கும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அதேபோன்று நாடு மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக உரிய அதிகாரிகளால் சட்டம் மற்றும் ஒழுங்கு அடிப்படையிலும், கட்டமைப்பு ரீதியிலும் பரந்தளவிலான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை 2014 - 2015 காலப்பகுதியிலும், பின்னர் 2017 ஆம் ஆண்டிலும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமையை நினைவுகூர்ந்த அவர், உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அபாய மதிப்பீட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவி முக்கிய பங்கு வகித்ததாகவும், இதனூடாக 2019 ஆம் ஆண்டு சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை இம்முறை நடைபெறும் மதிப்பீடு மிகமுக்கியமானது என்றும், இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச மதிப்பீட்டாளர்களின் நேரடிக் கள ஆய்வு இன்னும் இரு வாரங்களுக்குத் தொடரும் என்றும் தெரிவித்த அவர், இலங்கை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்படக்கூடாது என்ற ஒற்றை இலக்குடன் பல ஆண்டுகளாக அதிகாரிகள் இந்த மதிப்பீட்டுக்குத் தயாராகி வருகின்றனர் என்றார்.