
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு சிறையில் கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர். ஆனால் நக கீறல்களுடன் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சவூதி சிறைச்சாலை தரப்பு குறிப்பிட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். இவரது விடயத்தில் அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும். விசேட குழுவை அனுப்புவதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது, இதற்கு சவூதி தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதா, அனோஜனை எவ்வழியிலாவது பாதுகாக்க வேண்டும். அதற்கான அரசாங்கம் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜன் பற்றிய அவசரமான விடயத்தை நான் மீண்டும் எழுப்புகிறேன். ஒரு சட்டப் பிரதிநிதிகள் குழு சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ளது. பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவொன்று முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் அனோஜன் சிறையில் தாக்குதலுக்கு உள்ளாகித் தலையில் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பின்னணியில் இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்.
இந்தத் தாக்குதல், அவரது காயங்கள் மற்றும் நிலைமை குறித்தும், அவரது பாதுகாப்பு குறித்து பெறப்பட்ட உறுதிகள் குறித்தும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியுமா? மரண தண்டனை விதிக்கப்பட்ட இவரை கொலை செய்தால் சொர்க்கத்தில் செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடுமையான தண்டனையைக் கோரி சவூதி அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார். குறிப்பிடப்பட்ட அந்த மேன்முறையீடு, முதன்மை தீர்ப்பு மற்றும் தண்டனை, அனோஜனின் மேன்முறையீடு,மரண தண்டனையை விதித்த தீர்ப்பு மற்றும் உயர் நீதிமன்ற மேன்முறையீடு ஆகியவற்றை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
சவூதி அரசுத் தரப்பின் மேன்முறையீட்டை அரசாங்கம் எப்போது பெற்றது? அனோஜனின் மேன்முறையீட்டு விசாரணைக்கு முன்னர் அது கிடைக்கப்பெற்றதா? மேலும் அதன் உள்ளடக்கங்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட தண்டனைக்கான ஆபத்து குறித்து அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டதா?
அனோஜனின் மேன்முறையீட்டிற்கு யார் அனுமதி அளித்தது மற்றும் என்ன சட்ட ஆலோசனை பெறப்பட்டது?
அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட தொகைகள் மற்றும் அனோஜனின் குடும்பத்தினரால் கோரப்பட்ட,சேகரிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட தொகைகள் உட்பட பெறுநர்கள், நோக்கங்கள் மற்றும் பற்றுச்சீட்டுக்கள் கூடிய சட்டக் கட்டணங்களின் முறிவை அமைச்சர் சபையில் சமர்ப்பிப்பாரா? மேன்முறையீடு செய்யப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்ட விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் குறித்த ஆவணங்களை கோரியுள்ளபோதிலும் இதுவரை ஏன் அந்த ஆவணங்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
ஒக்டோபர் 7ஆம் திகதி நிலைவரப்படி, சட்டப் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தின் முடிவு என்ன? என்ன சந்திப்புகள் நடைபெற்றன, என்ன ஒப்புக்கொள்ளப்பட்டது, மேலும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதா? இல்லையெனில், அதற்கான கடைசி நாள் எது?
அரச மன்னிப்புக்கான ஜனாதிபதியின் கோரிக்கையின் தற்போதைய நிலை என்ன? பிரதி சபாநாயகர் தலைமையிலான முன்மொழியப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் நிலை என்ன? அது அமைக்கப்பட்டுள்ளதா? அதன் உறுப்பினர்கள் யார் ? அந்த குழு எப்போது பயணம் செய்யும்? மேலும் அதனை ஏற்றுக்கொள்ள சவூதி அரேபியா சம்மதித்துள்ளதா?
அனோஜன் தொடர்பில் சவூதி அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதங்கள் அல்லது பதில்கள் யாவை? அத்தகைய அனைத்து கடிதங்கள் சபையில் சமர்ப்பிக்கப்படுமா?
அனோஜன் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது உண்மையா? அப்படியாயின், எப்போது, எங்கே, ஏன்? அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது மறுக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் உண்மையா? அவர் கடைசியாக எப்போது அவர்களுடன் தொடர்புகொண்டார், தூதரக அதிகாரி ஒருவர் எப்போது அவரை நேரடியாகச் சந்தித்தார்? இதற்கு அவசர பதிலளிக்குமாறும், தொடர்புடைய ஆவணங்களைச் சபையில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விடயத்தில் எவரும் அரசியல் நோக்கத்துடன் யாரும் செயற்படவில்லை. அனோஜனை எவ்வழியிலாவது பாதுகாப்பாக நாட்டுக்கு அழைப்பு வரவே எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கம் அதற்காக எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். உணர்வுபூர்வமான விடயங்களை வெளிப்படுத்த முடியாது என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம். எவ்வழியிலாவது அனோஜனை நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.












