
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் சொத்தைப் பயன்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு, இலங்கையின் பணச்சுத்திகரிப்பு எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, மாத்தறை நீதிவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் ஊடாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்த நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி நிலம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக இன்டர்போல் நீல அறிவித்தலை பெறுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவரின் இருப்பிடம், அடையாளம் அல்லது நடவடிக்கைகள் குறித்த மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்காகச் சர்வதேச பொலிஸ் அமைப்பினால் பொதுவாக நீல அறிவித்தல் கோரப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினால், பஷில் ராஜபக்ஷவின் பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18 அன்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












