கிளிநொச்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் நீண்ட தாமதம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!



கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் புதிய குடிநீர் இணைப்புக்காகக் கட்டணம் செலுத்திய பின்னரும், உரிய காலத்தில் நீர் இணைப்பைப் பெற முடியாமல் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத் தகவல்களின்படி, புதிய நீர் இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 4 நாட்களுக்குள் நீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நடைமுறையில் அப்பகுதி மக்கள் இந்நிபந்தனையின்படி இணைப்புகளைப் பெற முடிவதில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய நீர் இணைப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் தாமதித்தே இணைப்புகள் வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் மதத் தலைவர், புதிய நீர் இணைப்புக்காக விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகக் காத்திருந்தும் கிளிநொச்சி நீர் வழங்கல் அலுவலகத்தில் கட்டணம் கட்டணம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை பின்னர் இது குறித்து அந்த மதத் தலைவர் உயரதிகாரி ஒருவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் கடந்த திங்கட்கிழமை (12) அன்று பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்குப் அலுவலக பொறுப்பதிகாரி சம்மதம் தெரிவித்தார். எனினும், கட்டணம் செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்று புதன்கிழமை (28) வரை குறித்த ஆலயத்திற்கு நீர் இணைப்பு வழங்கப்படவில்லை என அம் மதத் தலைவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கிளிநொச்சியின் பல பாகங்களிலும் பொதுமக்கள் புதிய நீர் இணைப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும், கட்டணங்களைச் செலுத்தியும் நீண்டநாட்களாகக் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது. இந்நிலைமை அன்றாடத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் மக்களிடையே பெரும் நெருக்கடியையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இந்த முறையற்ற தாமதங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து உடனடி கவனம் செலுத்தி, மக்களுக்கு உரிய காலத்தில் தடையின்றி குடிநீர் இணைப்பு கிடைக்கத்தக்க வகையில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.