மக்களுக்கு உடனடியாக எரிபொருள் மானியம் வழங்குங்கள் – அரசாங்கத்திடம் சஜித் வலியுறுத்தல்



சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு அமையச் செயல்படாமல், திறைசேரியிலுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உடனடி எரிபொருள் மானியத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்து, செலவு மீட்பு முறையியலுக்கு அமைய எரிபொருள் விலையை உயர்த்த யோசனை முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

5ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்காக ஜனாதிபதிக்கு மக்கள் ஆணையளிக்கவில்லை. மாறாக, கடன் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஒப்பந்தத்துக்கு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குமே மக்கள் ஆணையளித்தனர்.

வரிகளை நீக்கி, திறைசேரிக்குச் செல்லும் அதிகப்படியான தொகையைக் கட்டுப்படுத்தி, அதிகாரிகளினதும் அமைச்சர்களினதும் மோசடிகளை ஒழித்து, துறைமுகத் தரையிறக்க விலையிலேயே மக்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அரசாங்கம் மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் வாக்களித்தனர். ஆனால் அதனை நிறைவேற்றத் தவறியதால், இந்த ஒப்பந்தம் தற்போது அரசாங்கத்திற்கே திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறியுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என்றார்.