மொனராகலையில் பேருந்து – முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி, சிறுமி உட்பட மூவர் காயம்!



மொனராகலை - வெடிகும்புர வீதியின் 4 ஆம் கல்வெட்டுக்கு அருகில் பயணிகள் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 08 வயதுச் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

மொனராகலையிலிருந்து வெடிகும்புர நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், எதிர்த்திசையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்துமே இவ்வாறு ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 08 வயதுச் சிறுமி, பெண் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி சுமார் 70 வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மொனராகலை, அலியாகத்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.