ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடை வழங்கியது சட்ட விதிகளுக்கு அமையவே – சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடை வழங்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் திணைக்களத்தின் நிலையான விதிகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு சிறைக்கைதிகளுக்கு உரிய ஆடை வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் திணைக்கள நிலையான கட்டளைகளின்படி, சிறையில் அடைக்கப்படும் எந்தவொரு நபருக்கும் கைதிக்கான சீருடை வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மதகுருமார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியுடன் அவர்களின் மத ரீதியான பாரம்பரிய ஆடைகளை அணிய வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படும் நபர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்படுவதில்லை. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போதும் சிறைச்சாலையால் வழங்கப்படும் சீருடையையே கட்டாயமாக அணிய வேண்டும் என்று சட்ட விதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது மத குருமாருக்குரிய ஆடையை அணிய விடாமல் தடுத்ததற்குப் பின்னால் அரசியல் தலையீடுகளோ அல்லது மேல்மட்ட அரசியல் அழுத்தங்களோ இருப்பதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

நாட்டின் ஜனாதிபதி முதல் சாதாரணக் குடிமகன் வரை அனைவருக்கும் சிறைச்சாலை கட்டளைச் சட்டங்கள் சமமாகவே பொருந்தும் என்றும், எந்தவொரு வெளித் தரப்பிடமிருந்தும் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார் தண்டனை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளின்படியே சிறை சீருடையை அணிந்து தண்டனைக் காலத்தைக் கழித்து வருகின்றனர். மேலும், இதனுடன் சேர்த்து தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் 34,987 ஆண் கைதிகளும் 1,915 பெண் கைதிகளும் உட்பட மொத்தம் 36,902 நபர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டுகளை விடக் கைதிகளின் எண்ணிக்கையில் உயர்வைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.