
நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் மதத்தலைவர்களின் துறவற ஆடையையோ அல்லது இவ்வாறான மதத் தலைவர்களின் ஆடையையோ அகற்ற முடியாது. அதனை அந்த மதத் தலைவர்களே தீர்மானிப்பார்கள். இவ்வாறான நடவடிக்கை நாட்டிற்கு தவறான முன்மாதிரியை பெற்றுத் தரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற விவசாய துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்நாட்டில் புத்தசாசன அமைச்சை உருவாக்கியவர் ரணசிங்க பிரேமதாச என்றும், ஜே. ஆர். ஜயவர்தனவின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பினூடாக புத்த சாசனத்திற்கு முதலிடம் வழங்கப்படுவதைப் போன்று, ஏனைய அனைத்து மதங்கள், கலாசாரங்கள் மற்றும் சமூகக் குழுக்களின் அடையாளத்தைப் பாதுகாத்து, அவர்களின் மத மற்றும் கலாசார சுதந்திரத்தைப் உறுதிப்படுத்தும் நல்லிணக்கமும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கினர். இதற்கமைய புத்த சாசனத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு உரிய இடமும் பலமும் வழங்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
தனிநபர்களை மறந்து மதத் தலைவர்களின் கௌரவம் மற்றும் அவர்களின் பரஸ்பர தன்மையை வெளிப்படுத்தும் துறவற ஆடைக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும். சிறைச்சாலைத் திணைக்களத்தின் 550 ஆவது ஒழுங்குவிதியின்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய தண்டனை பெற்ற கைதிகளை சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கூடாது என்ற பிரிவு காணப்படுகின்றது. அதற்கமைய உணர்வுபூர்வமாகச் செயல்பட்டு துறவற ஆடைக்கு இழிவு ஏற்படுத்தக் கூடாது. துறவற ஆடையை அகற்றுவதா இல்லையா என்பதை மதத் தலைவர்களே தீர்மானிப்பார்கள். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 216 ஆவது பிரிவின்படி துறவற ஆடையையோ அல்லது இவ்வாறான மதத் தலைவர்களின் ஆடையையோ அகற்ற முடியாது. அது நாட்டிற்கு தவறான முன்மாதிரியை பெற்றுத் தருகின்றது.
விவசாயி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்" என்று கூறும் இந்த அரசு, அன்று வயல்களுக்குச் சென்று நெல் அறுவடை செய்து, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று கூறிய போதிலும், இன்று ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, குரங்குகளை கணக்கு எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றது. இன்று இந்த அரசின் முன்னுரிமை இதுவாகவே மாறியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கமும், ஜனாதிபதியும் உட்பட அனைவரும் 'டொம் பச்ச' (வெற்றுப் பொய்) அரசியலை முன்னெடுத்து, மக்களை ஏமாற்றி விவசாயிகளுக்கும் பொய் கூறியுள்ளனர். இன்று இது குறித்துப் பேசும்போது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரிக்கின்றனர். ஜனாதிபதி இந்நாட்களில் நாடளாவிய ரீதியில் 'டொம் பச்ச' அரசியலில் ஈடுபட்டு வரும் வேளையில், விவசாய அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும் கூட பொதுமக்கள் மத்தியில் செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று அரசாங்கத்தால் உண்மையான விவசாயிகளிடமும், சாதாரண மக்கள் மத்தியிலும் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கும் உத்தரவாத விலை குறித்து திருப்தியடைகிறீர்களா என விவசாயிகளிடம் வினவிப்பார்க்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிக்கிறேன். ஒரு கிலோ நெல் உற்பத்திக்கான செலவுத் தொகையை தந்திரமாக கணக்கு போட்டு, அமைச்சர் லால் காந்த ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு 137 ரூபா செலவாகின்றன என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இருந்த போதிலும், 140 ரூபாவையேனும் உத்தரவாத விலையாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், இன்று ஒவ்வொரு கிலோ நெல்லிலும் 17 ரூபாவை நட்டமடையச் செய்து, 120 ரூபா உத்தரவாத விலையே வழங்கப்படுகின்றது. இந்த 120 ரூபாவும் நெல் உற்பத்திக்கு 93 ரூபா செலவாகும் எனக் கணக்கிட்டு, அதனுடன் 30வீதம் இலாபத்தைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட 'ஜில்மாட் சூத்திரம்' மூலமாக விவசாயிகளை அநாதரவாக்கியுள்ளனர் என்றார்.












