ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியது சாசனத்துக்கும் சட்ட மரபுக்கும் முரணானது – சம்பிக்க ரணவக்க



கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை சிறைச்சாலை அதிகாரிகள் அகற்றி, அவரை சாதாரண உடையில் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தியமை சாசன மரபுக்கும் சட்டத்தின் வரலாற்று முன்னுதாரணங்களுக்கும் முரணானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியமை, அந்த தண்டனையை ஜனாதிபதி நீக்கியமை, பின்னர் நீதிமன்றம் அந்த தீர்மானத்தை இரத்துச் செய்தமை போன்ற சட்ட விடயங்களை நாம் இங்கு ஆராயவில்லை. அவை நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டியவை. ஆனால், சாசன மரபின்படி ஞானசார தேரர் ஒரு துறவி செய்யக்கூடிய மிகவும் கடுமையான, மன்னிக்க முடியாத 04 குற்றங்களில் ஏதேனும் ஒன்றுக்கு உட்பட்டுள்ளாரா என்பதே முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

ஒரு பிக்குவை காவி உடையிலிருந்து நீக்குவதற்கான சாசன அதிகாரம் சம்பந்தப்பட்ட சங்க சபைக்கே உள்ளது. கொலை, பாலியல் உறவு, பாரிய திருட்டு அல்லது இல்லாத ஆன்மிக நிலையை பெற்றதாக பொய்யாகக் கூறுதல் போன்ற ஒரு துறவி செய்யக்கூடிய மிகவும் கடுமையான, மன்னிக்க முடியாத நான்கு குற்றங்களில் பிக்கு ஒருவர் ஈடுபட்டிருந்தால், உரிய சங்க அமைப்பு விசாரணை நடத்தி காவி உடையை அகற்ற முடியும். ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது.

ஞானசார தேரர் ஏனைய கைதிகளைப் போல சட்டத்துக்கு உட்பட்டவரே. நீதிமன்றம் வழங்கிய தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். ஆனால், தண்டனை அனுபவிப்பது அவரது மத உரிமையை பறிப்பதற்கு காரணமாக முடியாது. சீக்கியர்கள் தலைப்பாகையையும், முஸ்லிம்கள் தமது மத அடையாளங்களையும் சிறையில் இருந்தாலும் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதேபோன்று பௌத்த பிக்குவின் காவி உடையும் மத உரிமையின் ஒரு பகுதியாகும்.

கடந்த காலத்தில் உடுகெந்தவல சரணங்கர தேரரின் காவி உடையை சிறைச்சாலை அதிகாரிகள் அகற்ற முயன்றபோதும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர் நீதியமைச்சர் டி.பி. ஜயதிலக தலையிட்டு, ஒரு துறவி செய்யக்கூடிய மிகவும் கடுமையான, மன்னிக்க முடியாத 04 குற்றங்களுக்கும் உட்படாததால் காவி உடையுடனேயே சிறையில் வைக்க முடியும்;. இதுபோன்ற வரலாற்று முன்னுதாரணங்கள் உள்ளன.

எனவே, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியது சாசனத்துக்கும் சட்ட மரபுக்கும் எதிரானது. ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக தலையிட்டு கோட்டை சங்க சபையின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்து பௌத்த சாசனத்துக்கு பாதுகாப்பு வழங்குகிறது. அந்த பாதுகாப்பை மீறி மத உரிமையை பறிப்பது அரசியலமைப்புக்கும் சாசன மரபுக்கும் முரணானது.

இந்த தீர்மானகரமான தருணத்தில் பௌத்தர்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் மத உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். மனித உரிமைகளின் அடிப்படையிலும் கைதியாகவும், பிக்குவாகவும், தனது மத நம்பிக்கையின் அடிப்படையிலும் ஞானசார தேரருக்கு காவி உடையை அணிந்திருப்பதற்கான முழுமையான உரிமை உள்ளது என்றார்.