மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மறைக்க உணர்வுப்பூர்வமான விவகாரங்களைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் – புபுது ஜயகொட குற்றச்சாட்டு !



வரலாற்று ரீதியாக மக்கள் சமூகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் பிணைந்துள்ளனர். அத்தகைய உணர்வுகளை அரசியல் இலாபத்துக்காகவும் ஆட்சியை தக்க வைக்கும் கருவியாக தற்போதைய அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் மாத்திரமின்றி பிரதான எதிர்க்கட்சிகளும் உண்மையான மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறி இத்தகையை திசைதிருப்பல் விவகாரங்களை விவாதாப் பொருளாக்கி வருகின்றன என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) வெள்ளிக்கிழமை ஊடகமொன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பெரும்பான்மையான பொதுமக்கள் தற்போது கடுமையான வாழ்வாதார போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். உலக வங்கியின் தரவுகளுக்கமைய நாட்டின் கணிசமான பகுதி மக்கள் குறிப்பிட்ட வருமான வரம்புக்குகீழ் வறுமையில் வாழ்கின்றனர்.

அரசாங்கம் குறிப்பிடும் வறுமைக் கோட்டு தரவுக்கமைய பார்த்தால் ஒரு நாளைக்கு 600 ரூபாவாக்கும் குறைவான வருமானத்தில் வாழும் நிலைமையே காணப்படுகிறது. இது மாத்திரமன்றி சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, நாட்டில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கடுமையாக உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் இத்தகைய நெருக்கடிகளினால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டங்களை மேற்கொள்வார்கள் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் போன்ற கடுமையான விதிமுறைகள் மூலம் மக்களின் அடிப்படைப் போராட்ட உரிமைகள் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக முயன்று வருகின்றனர். மக்களின் உண்மையாக பொருளாதார சிக்கல்களை மறைப்பதற்காக சமூகம் மற்றும் கலா்சசாரம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விவகாரங்கள் அரசியல் மேடைகளில் வேண்டுமென்றே முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் மாத்திரமின்றி பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியும் உண்மையான மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறி இத்தகையை திசைதிருப்பல் விவகாரங்களை விவாதாப் பொருளாக்கி வருகின்றது. இது மறைமுகமாக அரசாங்கம் தனது தவறான பாதையை நியாப்படுத்த வழிவகுக்கிறது.

எனவே பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் நாட்டின் பிரதான விவாதப் பொருளாக மாற்றுவதற்கு விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும் என்றார்.