காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி CIDயால் கைது !



பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர் என அறியப்படும் 'லொக்கு பெட்டி' என்பவரின் பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 'அல்மேதா' என்பவர் படுகொலைச் சம்பவம் தொடர்பில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் காலி, வக்வெல்ல பகுதியில் உள்ள கிங் கங்கை பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, கொன்கிரீட் தூண் ஒன்றுடன் பிணைக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்து. அத்தோடு சடலத்தின் முகம் மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, மீட்கப்பட்ட சடலம் பாதாள உலகக் குழுத் தலைவரான 'லொக்கு பெட்டி'யின் பிரதான துப்பாக்கிதாரியான 'அல்மேதா' என்பவருடையது என தெரியவந்தது.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்கள் தெரியவந்த தகவல்களுக்கமைய, இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது.