பபாவ உத்தரகந்த வனப் பாதுகாப்புப் பகுதியில் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் எச்சங்களைச் சேகரித்தமை தொடர்பான வழக்கு, வெள்ளிக்கிழமை (06) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவர்களுக்கு மொத்தமாக 10,692,000 ரூபா அபராதம் விதித்தது.
மேலும், குற்றவாளிகளை 50 இலட்சம் மற்றும் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின்போது அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டது.
அத்துடன், குற்றவாளிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த நீதவான், இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், கைப்பற்றப்பட்ட வனவிலங்கு மாதிரிகள் மற்றும் வழக்குடன் தொடர்புடைய ஏனைய பொருட்களை அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வனவிலங்கு வட்டார அதிகாரி கே.டி.என். முத்துகெலும் தலைமையிலான வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர், ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.










.jpg)


